" என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் " என்று அ.மருதகாசி ஒர் பாடல் எழுதியுள்ளார்.இப்பாடலின் நவீன ராகமே நமக்கு தெரியும் அதுவே தொல்லைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்யபடுகிறது இது செய்தியில்லை ! செய்தி வேறு ! ஜுன் 4 இரவு முதல் ஜுன் 6 காலை வரை இணையம் சடங்காக கொண்டாடும் நிகழ்வு ஒன்று உள்ளது.சில ஆகச் சிறந்த நல்லோர் மட்டுமே விவரம் தெரிந்து ஜூன் -5 " உலக சுற்றுச்சூழல் தினம்" இந்நாள் சாதி, மத , இனம் மற்றும் நாடுகள் மறந்து கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய திருநாள் என்று பேசுவர்.பேசியதோடு இன்றி அன்று சில மரங்களும் நடுவர் ! நட்டது சில ! எடுத்துக்கொண்ட படங்கள் பல! இந்த நிகழ்வு நடந்ததற்கு நாளிதழ்கள் சாட்சிகளாக உள்ளன.நட்ட எத்தனை மரங்கள் வளர்ந்து சாட்சிகளாக இன்று நின்றுள்ளது? இக்கேள்வி கேட்டதாலே உங்கள் கடுஞ்சினம் என் பக்கம் இருக்கும்.இந்த கேள்விகளும் இலவச இணைப்பாக வந்திருக்கும் " உனக்கென்ன அக்கறை , மாமனா ? மச்சனா ? என வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் கூட என்னை நோக்கி வரலாம்.
நாள் ஓட்டத்தில் உயிர் பிழைக்க ! தொடர்ந்து வாழ ஓடுகள வீரர்களை விட வேகமாக ஓடவேண்டிய காலத்தில் இதற்கெல்லாம் எங்கே நேரம்? இந்த பூமி பந்தில் நாம் வாழும் நாள் எல்லாம் நம்மை தாங்கும் இயற்கைக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? அடப்போப்பா ? இந்த காலத்தில் கருவில் சுமந்த தாய்க்கே கருணை இல்லத்தில் இடம் தேடுகிறோம் .இதற்கு ஏன் நேரம் செலவு செய்ய வேண்டும் என்றும் ஓர் சிலர் கேட்கலாம்.
" வெற்றி மேல் வெற்றி தான் நம்ம கையிலே! வெள்ளிக்காசு என்றுமே நம்ம பையிலே " என பாடி கொண்டாடி உழைத்து சேர்க்கிறோம் செல்வத்தை, என் தாத்தா குடிசையில் வாழ்ந்தார் , நான் அழகிய வீட்டில் வாழ்கிறேன் , என் மக்கள் அரண்மனையில் தான் வாழ வேண்டுமென ஓடி ஓடி உழைக்கிறோம்! ஆனால் அவர்கள் உயிரோடு வாழ வேண்டுமே என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு ஒன்று தெரியுமா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை ( I.C.M.R) தற்போது இதை கூறியுள்ளது " இந்தியநாட்டில் 40 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் காற்று மாசுபாட்டால் வருகிறது.இந்நிலை தொடர்ந்தால் 60 சதவிகிதம் வரை குழந்தைகள் மரணம் நடக்க வாய்ப்புள்ளதாம் நுரையீரல் புற்றுநோயால், இன்னும் ஓர் தகவலையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை கூறியுள்ளது "1990 முதல் 2010 வரை காற்றில் வெளிக்காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் முன்பெல்லாம் 50-60 வயது நோயாளிகளை பாதித்து வந்த நுரையீரல் புற்றுநோய் தற்போது 28 வயது நிரம்பிய இளைஞர்களை பாதித்து வருகிறதாம் " என்ற அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது.இத்தகைய பாதிப்பிற்கு யார் காரணம்? நாம் தானே? இருக்க இடம் வேண்டுமென காடுகளை அழித்தோம்! உண்ண உணவு என இயற்கையை சுரண்டுகிறோம் . இதையெல்லாம் தாண்டி பெருவணிக நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் துரித உணவுகள் விற்க தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் நம் குழந்தைகள் மனதை மூளைச்சலவை செய்து இயற்கை உணவுகளை சத்துள்ள உணவுகளை மக்கள் மனதைவிட்டு ஓட செய்து விட்டார்கள்.நம் நாட்டில் துரித உணவு உணவகங்கள் அதிகம் இயற்கை உணவகங்களை தேட வேண்டியுள்ளது விளைவு " புவிவெப்பமயமாதல்" இதனால் நம் நாட்டில் கரியமில வாயு அளவு பெருமளவு உயர்ந்து விட்டது விளைவு சராசரி வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று சார்ந்தே இருக்கிறது .இதனை எல்லாம் நாம் மறந்து விட்டோம் நாம் வாழ வேண்டும் என்ற சுயநலமிகளாக வாழ்கிறோம்.1974 தொடங்கி தற்போது வரை 47 ஆண்டுகளாக உலக சுற்றுச்சூழல் தினம் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் நம்மை ஊக்குவிக்கவுமே கொண்டாடப்படுகிறது.இப்போதவது நாம் செயலாற்ற வேண்டும் இல்லையேல் பல மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
"நாடுகள் வாழ காடுகள் தேவை.காடுகளை காக்க நேரம் இல்லாவிட்டாலும் மரம் ஒன்றாவது நடுங்கள், மரம் நட இடமில்லாதோர் மாடித்தோட்டம் அமைத்திடுக" " ஆலும் வேலும் பல்லுக்குறுதி " என்ற பழமொழி உங்களுக்கு தெரியும்.இந்த பழமொழி சொல்வது போல அரசமரம், ஆலமரம் மற்றும் வெப்பமரங்களை அதிகளவில் நடுங்கள் இவை அதிக அளவு உயிர்வளியை தரும் மரங்களாகும் . நம் சங்கதிகள் வாழ வீடும் செல்வமும் சேமிப்பது மட்டும் நம் இலக்கு அல்ல, அவர்கள் வாழு இயற்கையையும் , காற்றையும் சேமிப்பதும் மிக மிக இன்றியமையாதாகும் . எனவே மரம் வளர்ப்போம்! அதுவே நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு சுத்தமான காற்றும் ! மாசில்லா உலகமுமே ஆகும் .
- இரா. முத்து கணேஷ்
ஆசிரியர்