நீங்கள் சிறப்பானவர்கள் உங்களிடம் ஓர் சிறந்த தகுதி உள்ளது .எவரிடமும் இல்லாத ஓர் தகுதி!வெகுமதியான தகுதி! வெறும் மதியாளர்களிடம் இல்லாத தகுதி ! சிறப்புகளை தரும் தகுதி! அது என்ன தகுதி? என நீங்கள் கோபத்தின் மேல் சென்று உங்கள் மனம் கேட்கும் கேள்வி எனக்கும் கேட்கவே செய்கிறது.அது என்ன தகுதி தெரியுமா? நண்பர்களே ! வாசிப்பு தகுதி தான் நண்பர்களே ! தற்போது நீங்கள் வாசிக்க கூடிய அந்த தகுதி தான் நண்பர்களே! வாசிப்பு எனும் சிறந்த பழக்கம் அலைபேசிக்குள் ஆமை போல் சுருங்கி விட்டது.அலைபேசிக்கும் ஆமைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள் அல்லவா நீங்கள் ?
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் நினைவு வரும் கற்றோர்க்கு , ஆமை தற்காத்துக் கொள்ள தன் ஐம்புலன்களை அடக்கும்.தந்தை பெரியார் " இனிவரும் உலகம் " எனும் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் " தூரத்தில் இருக்கும் உருவத்தை மிக அருகில் வைத்து காணும் நிலை வருங்காலத்தில் வரும் " என்று சிந்தித்து சொன்னார்கள். நீயூட்டனும் ஆப்பிள் விழுந்ததை கண்டு பசி கொள்ளாது சிந்தித்ததாலே புவியீர்ப்பு விசை பிறந்தது.இப்பெரும் மனிதர்களுக்கு இந்த சிந்தனையை தந்தது எது என பார்த்தால் வாசிப்பும், வாசிப்பால் பெற்ற கல்வியறிவுமே ஆகும் .
வாசிப்பு தனித்துவம் படுத்துகிறது மனிதர்களை , வாசிப்பு புகழின் உச்சிக்கு ஏன் அவர்கள் வாழும் தெருக்களுக்கும் கூட பெயராக்கி தருவதும் வாசிப்பே ஆகும்.அண்ணா நகர் , வள்ளுவர் நகர் , ஔவை நகர் , வால்மீகி நகர் , பெரியார் நகர் என தமிழ்நாட்டில் நம் தாய்மொழியால் தாய்மொழி மூலம் வாசிப்பதால் சிறப்பு பெற்ற சிலரை மட்டுமே கூறி இருக்கிறேன்.வாசிப்பால் மேன்மை பெற்றோர் பலர் பாரினில் உண்டு.அதனாலே வள்ளுவரும்
" தொட்டனைந்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைந்தூறும் அறிவு"
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
" கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
என பல குறட்பாக்களை சிந்தித்தே நாம் வாசித்திட வேண்டுமென வாசிப்பை சுவாசமாய் நாளும் தொடர வேண்டுமென வள்ளுவ பெருமகனார் தந்துள்ள சான்றுகள் பல.
இந்த வாசிப்பும் கல்வியறிவும் ஒருபோதும் நமக்கு எளிதாக கிடைக்கவில்லை!ஒரு சாரார்க்கு மட்டுமென இருந்த கல்வி ஒரு மொழிக்கு மட்டுமே கல்வி என்ற உண்மை நிகழ்வுகளும் நம்மிடம் இருக்கத்தான் செய்தது. சமஸ்கிருதம் கற்று இருந்தால் மட்டுமே மருத்துவராகலாம் என்ற நிலை ஓர் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது. பட்டமளிப்பு விழாக்கள் கூட கற்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கிடையாது.ஏன் காலத்தில் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்கள் அனைவரும் படிக்க வேண்டுமென நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று இருக்கிறார்கள்.எல்லா சமூக மாணவர்களும் உயர் கல்வி பெற தலைநகரான சென்னை செல்வார்கள் ஆனால் விடுதிகள் இருந்ததோ ஒரு சிலருக்கு மட்டுமே! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஏற்படுத்திய விடுதிகளாலே கல்வியும் மேன்மையும் பெற்றோர் பல இலட்சமாணவர்கள் உண்டு.இவ்வாறு தொடங்கிய நம் தமிழக மாணவர்கள் சிந்தனை வளர்ச்சியை மதிநுட்பத்தை இந்திய நாடுகள் அல்ல ! உலக நாடுகளே! இன்று தேடித்தேடி வருகிறது.நம் இருண்ட காலம் கற்ற கல்வியாலே உதயமாகி உள்ளது.
சரி இக்கால காட்சி ஊடகம் வந்த பின்னர் அலைபேசிக்குள் நாம் சுருண்டு விட்டோம் ! சுருக்கி கொண்டோம் ! நம் அறிவை , எதிர்காலத்தை சுருக்கி கொண்டோம் ! ஆழ்மனதிலுள்ள வக்கிரங்கள் டீக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராமாக வருகிறது .தேடித்தேடி கற்க வேண்டிய நாம் முகம் தெரியாத நபர்களை தேடி அது பெருமை என நினைக்கிறோம்.புத்தகம் பல அலைபேசியில் இலவசமாய் கோப்புகளாக குவிந்துள்ளது என்போர் பலர் அவர்களே தன் வீட்டை தானே அணுகுண்டால் தகர்போர் ஆவார்.புத்தக கோப்புகளால் இப்போது பல கண் மருத்துவமனைகள் அதிகமாயிற்று! தலைக்குள் உள்ள மூளைக்கு கல்வி கனம் வாசிப்பின்மையால் குறைந்து மூக்கின் மேல் கண்ணாடியாக கனம் கூடியுள்ளது ! பலர் பொற்காலங்களை அலைபேசிகள் உண்டு விட்டது.இவை எல்லாம் மாறிட வேண்டும் என்றால் நாம் முதலில் கையில் புத்தகங்களை எடுக்க வேண்டும். கற்போம் நல்ல நூல்களை ! வாசிப்போம் தினம் தினம் ! கிடைக்கும் நல்ல எதிர்காலம் வரமாய் தொடர் வாசிப்பால்! வாசிப்போம் வளர்வோம் !
- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்