Wednesday, October 19, 2016

எது நாஸ்திகம் இல்லை

எது நாஸ்திகம் இல்லை?

நமது நாட்டிலே சாமி தாசி வீட்டுக்கு போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

சமணரைக் கழுவேற்றம் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

குடம் குடமாய் நெய்யும் வெண்ணையும் கொண்டு போய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

வெடிமருந்துக்கும் அடுப்புக் கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி பண்டிகை வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

அரசினடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை  எங்கே என்று கேட்டால்,நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி. அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

வேறு ஒரு மதக்காரர்(பவுத்தர்) கோவிலை இடித்து சிலையைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

எனவே ,நமது நாட்டுக்கு எந்தக் காரியம்தான் நாஸ்திகம் அல்லாததோ ? நமக்கு விளங்கவில்லை.

-குடியரசு(13/01/1929)

No comments:

Post a Comment